அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கு: வக்கீல் உள்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை

அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 9 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.

Update: 2022-03-22 20:10 GMT
மதுரை,

மதுரை தெற்கு 3-ம் பகுதி அ.தி.மு.க. இளைஞரணி இணைச்செயலாளராக இருந்தவர் அழகர்சாமி (வயது 49). இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம்.

அங்கு கருவேல மரங்கள் குத்தகைக்கு எடுப்பதில் இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது.

இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு 10 பேர் கும்பலால் அழகர்சாமி கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது கொலை கும்பலைச் சேர்ந்த நிரஞ்சன் என்பவர் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

9 பேருக்கு ஆயுள்

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜய லிங்கம், சோலைராஜ், ராமசாமி, அலெக்ஸ்பாண்டி, நீதிராஜன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நீதிராஜன் வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.

முடிவில், இந்த வழக்கில் விஜயலிங்கம், சோலைராஜ், ராமசாமி, அலெக்ஸ்பாண்டி, நீதிராஜன், முனியசாமி, மற்றொரு அலெக்ஸ்பாண்டி, ரஞ்சித்குமார், நித்யானந்த் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி நேற்று தீர்ப்பளித்தார்.

மேலும் செய்திகள்