ஜெயலலிதா பெயரில் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ.1,500

ஜெயலலிதா பெயரில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.;

Update: 2022-03-21 17:43 GMT
ஜெயலலிதா பெயரில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500 வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் அ.தி.மு.க. கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கொடுத்துள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
ரூ.1,500 உதவித்தொகை
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை, சமூக நலத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றின் மூலம் சுமார் 1 லட்சத்து 94 ஆயிரத்து 430 குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை அரசால் வழங்கப்படுகிறது. மொத்தமுள்ள 3 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 430 குடும்பத்தினர் உதவித்தொகை பெறுகின்றனர்.
மீதமுள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் குடும்பத்தினருக்கு எந்தவித மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படுவதில்லை. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் கீழ் உள்ள சுமார் 1  லட்சம் குடும்பத்தினரை இனம்கண்டு அவர்களின் குடும்பத்துக்கு மாதம் ரூ.1,500 அரசு வழங்க முன்வர வேண்டும்.
ஜெயலலிதா பெயர்
ஏழை குடும்ப தலைவிக்கு பாதுகாப்பு அளிக்கும் இத்திட்டத்துக்கு, தனது உயிர் மூச்சு உள்ளவரை பெண்கள் சமுதாய நலத்துக்காக பாடுபட்ட ஜெயலலிதாவின் பெயரை சூட்டி இத்திட்டத்தை தொடங்கவேண்டும். இந்த திட்டத்துக்கு மாதம் ரூ.15 கோடி அளவில் ஆண்டுக்கு ரூ.180 கோடி தேவைப்படும்.
குடும்ப தலைவிகளுக்கு உதவி புரியும் விதமாக இந்த மகத்தான திட்டத்தை இந்தியாவிற்கே முன்மாதிரியாக நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு இத்திட்டத்தினை அமலுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் அன்பழகன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்