வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம்

காரைக்கால் மாவட்ட வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாஜிம் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்;

Update: 2022-03-20 16:37 GMT
புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிபுரியும் வவுச்சர் (தினக்கூலி) ஊழியர்களுக்கு போதுமான ஊதியம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இதையடுத்து ஊழியர்களின் பல்வேறு போராட்டம் காரணமாக முதல்- அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறையில் பணிபுரியும் வவுச்சர் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் உயர்த்தி அரசாணை பிறப்பித்தார்.
இந்த உத்தரவுப்படி புதுச்சேரி பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் காரைக்கால் மாவட்ட பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு  வழங்கப்படவில்லை.
ஒரு திட்டத்தை நிறைவேற்றும்போது, அத்திட்டம் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் அமல்படுத்தவேன்டும். அப்படியிருக்க காரைக்கால் மாவட்ட ஊழியர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. இதனால் காரைக்கால் மாவட்டம் புதுச்சேரி மாநிலத்தில் தான் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுகிறது. 
அதேபோல் வாரிசுதாரர்கள் அடிப்படையில் சேர்ந்த ஊழியர்களுக்கும் ஊதியம் வழங்கப்படவில்லை. எனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் இந்த விஷயத்தில் தலையிட்டு காரைக்கால் மாவட்ட வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்