பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றது - பயணிகள் கடும் அவதி

பழனி அருகே பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

Update: 2022-03-20 12:48 GMT
திண்டுக்கல்,

பழனி அருகே பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றது. 2 1/2 மணி நேர தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

பாலக்காடு எக்ஸ்பிரஸ்

சென்னையில் இருந்து திண்டுக்கல், பழனி வழியாக பாலக்காடுக்கு தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் செல்கிறது. திண்டுக்கல்லில் இருந்து காலை 6.10 மணிக்கு புறப்பட்டு 7.10 மணிக்கு பழனிக்கு வருகிறது. இந்த ரெயிலில் தான் வட மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு அதிகளவில் வருகின்றனர். இன்று வாரவிடுமுறை என்பதால் ஏராளமான பக்தர்கள் ரெயிலில் பயணம் செய்தனர்.

அதன்படி இன்று திண்டுக்கல்லில் இருந்து புறப்பட்டு பழனி நோக்கி பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. பழனி அருகே கணக்கன்பட்டி பகுதியில் வந்தபோது திடீரென என்ஜின் பழுதாகி நடுவழியில் நின்றது. அதையடுத்து ரெயில்வே பணியாளர்கள் பழுதை சரி செய்ய முயன்றனர். ஆனால் சரி செய்ய முடியவில்லை. இதனால் ரெயிலில் இருந்து பயணிகள் பழனிக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

2 1/2 மணி நேரம் தாமதம்

இதற்கிடையே திருவனந்தபுரத்தில் இருந்து மதுரை செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் பழனி ரெயில் நிலையத்துக்கு வந்தது. பின்னர் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயிலின் என்ஜின் கணக்கன்பட்டி பகுதிக்கு சென்று, அதன் மூலம் பழுதாகி நின்ற பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் பழனி ரெயில்நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக பாலக்காட்டில் இருந்து தனியாக ஒரு என்ஜின் வரவழைக்கப்பட்டது.

அதன் பிறகு அனைத்து ரெயில்களும் பழனி ரெயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டது. மேலும் பழுதான என்ஜின் பாலக்காடு கொண்டு செல்லப்பட்டது. பாலக்காடு எக்ஸ்பிரஸ் பழுது காரணமாக சுமார் 2 1/2 மணி நேரம் அனைத்து ரெயில்களும் புறப்படுவதற்கு தாமதம் ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் பழுதால், ஆயக்குடி ரெயில்வே கேட் சுமார் 15 நிமிடம் அடைக்கப்பட்டதால் பழனி-திண்டுக்கல் சாலையில் வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்