ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் நாளை ஓ.பி.எஸ். ஆஜர்

ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு முதல் முறையாக நாளை ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.;

Update: 2022-03-20 09:04 GMT
சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், 90 சதவீத விசாரணை நிறைவடைந்துள்ளதாக ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. 

முன்னதாக ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், அது குறித்து ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து வந்தார். அந்த வகையில், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, ஓ.பன்னீர்செல்வம் விசாரணைக்கு ஆஜராக இதுவரை 8 முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால் பல்வேறு காரணங்களால் அவரால் இதுவரை ஆஜராக முடியவில்லை. இந்நிலையில் நாளை காலை 11.30 மணிக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை அளிக்க உள்ளார். அதே சமயம் சசிகலா உறவினர் இளவரசி நாளை காலை 10 மணியளவில் விசாரணை ஆணையத்தில் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்