முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா அலகு குத்தியும் பறவை காவடி எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்

புதுவையில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update: 2022-03-18 14:07 GMT
காலாப்பட்டு
புதுவையில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். 

பங்குனி உத்திர திருவிழா

புதுவையை அடுத்த பெரியகாலாப்பட்டு பகுதியில் பாலமுருகன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி  சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் பால்குடம், பறவைக் காவடி எடுத்தும், கார், கிரேன், லாரி உள்ளிட்ட வாகனங்களை இழுத்தும் ஊர்வலமாக வந்தனர்.
இந்த ஊர்வலம் பெரிய காலாப்பட்டு பகுதியின் முக்கிய வீதிகளின் வழியாக வந்து கோவிலை வந்தடைந்தன. இதில் புதுவை, தமிழக பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அலகு குத்தி நேர்த்திக்கடன்

அரியாங்குப்பம் சுப்பையா நகரில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி பக்தர்கள், அலகு குத்தியும், காவடி எடுத்தும் பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். 1,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் சபாநாயகர் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் குருமூர்த்தி, செயலாளர் ஜெயக்குமார் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

மிளகாய் பொடி அபிஷேகம்

கதிர்காமம் முருகன், புதுவை ரெயில் நிலையம் அருகே உள்ள கவுசிக பாலசுப்ரமணியர் கோவில், உழந்தைகீரப்பாளையம் முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோவில்களில் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் முருகனை தரிசித்தனர்.
புதுவை முருங்கப்பாக்கம் திரவுபதி அம்மன்ஆலயத்தில் உள்ள வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி ஆலயத்திலும் பங்குனி உத்திர விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவில் பக்தர் ஒருவருக்கு மிளகாய்ப்பொடி அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்