குன்னத்தூரில் தனியார் மருத்துவமனை பிரசவ அறைக்கு சீல்..!
குன்னத்தூர் அருகே மகப்பேறு மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையின் பிரசவ பகுதிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த குன்னத்தூர்-செங்கப்பள்ளி சாலையில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு மகப்பேறு மருத்துவர் இல்லாததால் பொது மருத்துவரே பேறுகால முன் கவனிப்பு, பிரசவம், அறுவை சிகிச்சை, கருக்கலைப்பு, பேறுகால பின் கவனிப்பு போன்ற சிகிச்சைகளை செய்வதாக தெரியவந்துள்ளது.
ஏற்கனவே இம்மருத்துவமனையில் 2021 டிசம்பர் 7 அன்று பிரசவத்தின் போது சிலுவை பிரகாசி என்பவர் உயிரிழந்துள்ளார். அப்போது மேற்கொண்ட விசாரணையில் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் மகப்பேறு தொடர்பான சிகிச்சைகள் ஏதும் மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும் தற்போது மேற்கொண்ட ஆய்வில் மகப்பேறு மருத்துவர் நியமிக்காமல் பொது மருத்துவர் விஸ்வநாதன் மகப்பேறு சிகிச்சை மற்றும் கருக்கலைப்பு போன்றவை செய்து வந்தது தெரியவந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதார பணி இணை இயக்குநர் மேற்கொண்ட நடவடிக்கையில் அங்குள்ள பிரசவ பகுதிக்கு சீல் வைக்கப்பட்டது. மகப்பேறு பிரிவுக்கு தனியாக மகப்பேறு மருத்துவர் நியமிக்கும் வரை மூடப்படுவதாகவும் மீறினால் மருத்துவமனை சான்றிதழ் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
பிரசவத்தின் போது பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு பிறகும் மகப்பேறு மருத்துவர் இல்லாமல் சிகிச்சை அளித்த சம்பவம் திருப்பூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.