ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கண்டக்டர் கைது

ஓடும் பஸ்சில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கண்டக்டர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-03-17 19:44 GMT
கோவை,

திருவண்ணாமலையை சேர்ந்த 22 வயது இளம்பெண், கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கியிருந்து, போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இதற்கிடையில் சொந்த ஊருக்கு சென்ற அந்த இளம்பெண், மீண்டும் கோவைக்கு செல்வதற்காக கடந்த 16-ந் தேதி இரவில் திருவண்ணாமலையில் இருந்து சேலம் சென்று அங்கிருந்து அரசு பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார். அந்த பஸ்சில் கண்டக்டராக ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தை சேர்ந்த பூவேந்திரன் (வயது 31) பணியாற்றினார்.

பாலியல் தொல்லை

இந்நிலையில், அவர் அந்த இளம்பெண் அமர்ந்து இருந்த இருக்கைக்கு முன்பு உள்ள இருக்கையில் அமர்ந்துகொண்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், அவரை கண்டித்தார். ஆனாலும் அவர் பாலியல் சீண்டலை தொடர்ந்தார். கோவை காந்திபுரம் பஸ் நிலையம் அருகே வந்ததும், பாலியல் தொல்லையை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த இளம்பெண் கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் சக பயணிகள், அவரிடம் விசாரித்தனர். அப்போது கண்டக்டர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி கதறி அழுதார். மேலும் அவரை தாக்கினார்.

கண்டக்டர் கைது

இதையடுத்து காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்துக்கு வந்ததும் சக பயணிகள் உதவியுடன் கண்டக்டர் பூவேந்திரனை காட்டூர் போலீஸ் நிலையத்துக்கு இளம்பெண் அழைத்து சென்றார். அங்கு நடந்த விசாரணையில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை பூவேந்திரன் ஒப்புக்கொண்டார். தொடர்ந்து இளம்பெண் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பூவேந்திரனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்