புதுவையில் ஆயுள் தண்டனை கைதிகள் 4 பேர் விடுதலை

நன்னடத்தை காரணமாக புதுவை சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

Update: 2022-03-17 17:37 GMT
நன்னடத்தை காரணமாக புதுவை சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
ஆயுள் தண்டனை கைதிகள்
புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் 300-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளில் 13 பேர் 14 ஆண்டுகள் சிறை தண்டணையை முடித்து விட்டனர். எனவே அவர்கள் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் ஆயுள் தண்டனை கைதிகள் அம்புரோஸ், மதன் என்ற செந்தில்குமார், பாலசுப்பிரமணியன், சக்திவேல் என்ற சக்தி ஆகிய 4 பேரையும் நன்னடத்தை காரணமாக விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டது.
4 பேர் விடுதலை
இதற்கான கோப்பு கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கவர்னர் அனுமதி அளித்ததை தொடர்ந்து சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 4 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். இதற்கிடையே தற்போது 14 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகள் 9 பேரையும் விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுவை அரசுக்கு கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்