புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை
உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் ஆலோசனை நடத்தினார்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன், மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் ஆலோசனை நடத்தினார்.
உள்ளாட்சி தேர்தல்
புதுவை மாநிலத்தில் கடந்த 2006-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு, தேர்வான மக்கள் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த 2011-ம் ஆண்டு முடிவடைந்தது. அதன்பிறகு மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கோரி பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டன.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையரான ராய் பி.தாமஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்தல் தேதியை அறிவித்தார்.
இடஒதுக்கீடு குளறுபடி
அப்போது பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கான வார்டு ஒதுக்கீட்டில் குளறுபடி நடந்துள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கினை விசாரித்த ஐகோர்ட்டு குளறுபடிகளை நீக்கி தேர்தல் தேதியை அறிவிக்க உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ரத்துசெய்யப்பட்டு மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. அமைப்பாளருமான சிவா எம்.எல்.ஏ. சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு
இதைத்தொடர்ந்து தேர்தல் அறிவிப்புக்கு சென்னை ஐகோர்ட்டு தடைவிதித்தது. இந்த வழக்கு தொடர்ந்து நடந்த நிலையில் தேர்தலுக்கு ஐகோர்ட்டும் தடை விதித்ததால் தேர்தல் அறிவிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இந்தநிலையில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி சிவா எம்.எல்.ஏ. சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணையர் ஆலோசனை
இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ராய் பி.தாமஸ் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அவர் அதிகாரிகளுடன் கேட்டறிந்தார்.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தேர்தலை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டால் அனைரும் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.