ஆற்றில் மணல் மூட்டைகளால் தடுப்பு அமைக்கும் விவசாயிகள்

கடல்நீர் உட்புகுவதை தடுக்க ஆற்றில் மணல்மூட்டைகளால் தடுப்பு அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2022-03-17 14:03 GMT
கடல்நீர் உட்புகுவதை தடுக்க ஆற்றில் மணல்மூட்டைகளால் தடுப்பு அமைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
கதவணை உடைப்பு
பாகூர் அருகே சுள்ளியான்குப்பம் கிராமத்தின் வழியாக முள்ளோடை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் மூலம் சுள்ளியான்குப்பம், கொரவெளிமேடு, மதி கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 
இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கதவணை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சேதமடைந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இருப்பினும் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தடுப்பணை அமைக்கப்படுமா?
இந்த இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் தான் கடல் இருக்கிறது. ஆற்றில் நீர்வரத்து குறையும் போது கடல்நீர் ஆற்றில் உட்புகுந்து விடுகிறது. இதற்காக ஆற்றின் குறுக்கே மணல்மூட்டைகளை வைத்து விவசாயிகள் தடுப்பு ஏற்படுத்தினர்.
கடந்த ஆண்டு பெய்த பருவமழையின் போது தடுப்புகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டன. இதனால் கடல்நீர் தற்போது ஆற்றின் வழியாக உட்புகுந்து வருகிறது. கடல்நீர் புகுவதால் விவசாயமும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதையடுத்து விவசாயிகள் தற்போது மீண்டும் மணல் மூட்டைகளை வைத்து தடுப்பு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண அங்கு தடுப்பணை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்