இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டார் சசிகலா
தற்போது சசிகலா இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.;
சென்னை,
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா தென் மாவட்டங்களில் ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் கடந்த 4-ஆம் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே விஜயாபதி விஸ்வாமித்திரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, சிறப்பு வழிபாடு நடத்தினார்.
பின்னர் மாலையில் சசிகலா திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மூலவர் மற்றும் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபட்டார். அப்போது இளவரசி, அவருடைய மகன் விவேக் ஆகியோர் உடனிருந்தனர்.
முன்னதாக திருச்செந்தூர் ரெயில் நிலையம் எதிரில் உள்ள விடுதியில் சசிகலா தங்கினார். அப்போது அதே விடுதிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவும் வந்தார். அவர், சசிகலா தங்கியிருந்த அறைக்கு எதிரே உள்ள அறையில் தங்கினார். பின்னர் தனது அறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாவை சந்தித்து விட்டு, கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.
இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் தற்போது சசிகலா இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றுள்ளார். சாலை மார்க்கமாக திட்டமிடப்பட்டுள்ள பயணத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களையும் தனது ஆதரவாளர்களையும் அவர் சந்திக்க இருக்கிறார்.