மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் வீதி உலா ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அறுபத்து மூவர் வீதி உலா நேற்று நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-03-16 23:58 GMT
சென்னை,

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக நடந்து வருகிறது. இந்தாண்டு பங்குனி பெருவிழா கடந்த 9-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

அதைத்தொடர்ந்து ‘அறுபத்து மூவர்’ திருவிழா நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வந்த கபாலீசுவரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். அப்போது கூடியிருந்த பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...’ என பக்தி கோஷமிட்டனர்.

மாடவீதிகளில் திருவீதி உலா

தொடர்ந்து விநாயகர் மற்றும் மயிலாப்பூரின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் ஆகியோர் முன்னே சப்பரத்தில் செல்ல, வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக்கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, பெரியநாயகி சமேத வாலீசுவரர், வீர பத்திர சுவாமிகள் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்குமாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளா காட்சியை காண காலையில் இருந்தே சென்னை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர்.

சைவ சித்தாந்த மன்றம் அன்னதானம்

விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள சைவ சித்தாந்த மன்றத்தில் அதன் தலைவர் பேராசிரியர் நல்லூர் சா.சரவணன் தலைமையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மயிலாப்பூரில் வசிப்பவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தார், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் மக்கள் கூடும் இடங்களில் சிறப்பு பந்தல் அமைத்து அன்னதானம், நீர் மோர், இனிப்புகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எழுது பொருட்களும் வழங்கினர்.

அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலை சுற்றி மாட வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். ஒலி பெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது போலீசார் அறிவுரை வழங்கினர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் இணை-கமிஷனர் தா.காவேரி உள்ளிட்ட பலர் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்