“அண்ணாமலை தான் கூறிய புகாரை 24 மணி நேரத்தில் நிரூபிக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை” - அமைச்சர் செந்தில்பாலாஜி

மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நன்கு அறிந்த பின்னரே அது குறித்து அண்ணாமலை விமர்சிக்க வேண்டும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2022-03-16 14:29 GMT
சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பின்போது, எண்ணூர் அனல் மின் நிலைய திட்ட விரிவாக்கத்திற்காக, ரூ.355 கோடி நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமான பி.ஜி.ஆர். எனர்ஜியிடம், முறைகேடாக ரூ.4,472 கோடி மதிப்பில் மீண்டும் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளதாக குற்றம் சாட்டினார்.   

மேலும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் அதிகளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதற்கு மிக முக்கிய காரணம் பி.ஜி.ஆர். போன்ற நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்ததுதான் என்றும், அனைவரும் ஜெனரேட்டர் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள், மீண்டும் மின்வெட்டு ஏற்படலாம் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். இது தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், திமுக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “குற்றச்சாட்டுகளை வைப்பதற்கு முன்பாக அதன் முழு விபரங்களையும் தெரிந்துகொள்வது அவசியம். எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கத் திட்டம் குறித்து புரிதலின்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பரில் தொடங்கிய பணிகள், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின்போது கிடப்பில் போடப்பட்டது. மின் திட்டத்திற்கான வைப்புத்தொகை 3% என குறிப்பிட்டு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. பி.ஜி.ஆர் நிறுவனத்துடன் கடந்த 2019-ல் அதிமுக ஆட்சியில் தான் ஒப்பந்தம் போடப்பட்டது. 

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை அண்ணாமலை தற்போது முன்வைத்துள்ளார். நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டபோது கூட தமிழகத்தில் சீரான மின் வினியோகம் வழங்கப்பட்டது” என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியே மின்வாரிய திட்டங்களுக்கு வைப்புத்தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை நன்கு அறிந்த பின்னரே விமர்சிக்க வேண்டும். எனவே, அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரம் பற்றி 24 மணி நேரத்தில் தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையென்றால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.”

இவ்வாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்