கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் - விஜயகாந்த்
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;-
சீனா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் மீண்டும் கொரோனா தொற்று வேகமாக பரவ தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மெத்தனம் காட்டாமல் முன்பு அமைத்தது போல் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் அமைத்து, சிறுவர் முதல் முதியவர்கள் வரை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு, தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களுக்கு அந்தந்த பள்ளி, கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த வேண்டும்.
சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுதல் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மீண்டும் கடுமையாக்க வேண்டும். மேலும் அனைத்து தரப்பினரும் தடுப்பூசி செலுத்தி கொண்டார்களா என்பதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும். வரும் முன் காப்போம் என்ற பழமொழிக்கேற்ப மீண்டும் கொரோனா தொற்று நம்மை அண்டாமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதில் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். pic.twitter.com/4bv3LpJUss
— Vijayakant (@iVijayakant) March 16, 2022