காரைக்காலில் அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு - சிசிடிவி கேமரா மூலம் சிக்கிய வாலிபர்..!

காரைக்கால் அருகே நள்ளிரவில் 3 கடைகளை உடைத்து, பணம் மற்றும் பொருட்களை திருடிய வாலிபரை, சிசிடிவி கேமரா பதிவின் மூலம் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-16 10:36 GMT
காரைக்கால்,

காரைக்கால் திருநள்ளாறு சாலை பகுதியில், ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே உள்ள மூன்று கடைகளை நேற்றிரவு வழக்கம் போல் பூட்டி விட்டு சென்றுள்ளனர். இன்று காலை வந்து பார்த்த போது 3 கடையின் ஷெட்டர் உடைக்கப்பட்டு பணம் மற்றும் கடையில் உள்ள பொருட்கள் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து, காரைக்கால் நகர காவல் நிலையத்தில் கடையின் உரிமையாளர்கள் 3 பேரும் புகார் கொடுத்தனர். இதன் பேரில், காரைக்கால் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடை முன்பு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். 

அப்போது மர்ம நபர் ஒருவர் கடை ஷெட்டரை உடைத்து பாம்பு போல நெளிந்து உள்ளே சென்று திருடி விட்டு தப்பிச் செல்வது தெரிய வந்தது. தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில், கடை அருகே வசிக்கும் ரகுமான் (வயது21) என்பவர், மேற்கண்ட கடைகளின் ஷெட்டரை உடைத்து கை வரிசை காட்டி இருப்பது தெரிய வந்தது. 

இதையடுத்து காரைக்கால் நகர் பகுதியில் பதுங்கியிருந்த ரகுமானை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் கடை பொருட்களை பறிமுதல் செய்தனர்.


மேலும் செய்திகள்