ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஸ்வீட் கடை உரிமையாளர் உயிரிழப்பு...!

குடியாத்தம் அருகே ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஸ்வீட் கடை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.;

Update: 2022-03-16 04:00 GMT
ஜோலார்பேட்டை,

வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே உள்ள மோட்டூர் பகுதியை சேர்ந்த குள்ளமந்திரி என்பவரின் மகன் ஏகநாதன் (வயது28).
இவர் கர்நாடக மாநிலம் ஏனகுண்டா என்ற பகுதியில் ஸ்வீட் கடை வைத்து நடத்தி வருகிறார்.

ஏகநாதன் கடந்த 4 நாட்களாக கடையில் வியாபாரம் இல்லாததால் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று மாலை மீண்டும் கர்நாடக மாநில பெங்களூருக்கு வேலைக்கு சென்று வருவதாக தனது அண்ணனிடம் கூறிவிட்டு சென்று உள்ளார்.

குடியாத்தம் அருகே உள்ள லத்தேரி காவனூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற சரக்கு ரெயில் ஏகநாதன் மீது மோதியது. இந்த விபத்தில் ஏகநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்