2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட வழக்கில் 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட வழக்கில் 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
கள்ள நோட்டுகள் புழக்கம்
புதுச்சேரியில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக சாரத்தை சேர்ந்த மனோஜ்குமார் (வயது 29), பிள்ளைத்தோட்டத்தை சேர்ந்த ஜெயபால் (21), அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த சரண், புதுவை ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மோகன்கமல் (31), சென்னை எர்ணாவூரை சேர்ந்த பிரதீப்குமார் (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பிரதீப்குமாரின் கூட்டாளி ரகு என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காவலில் எடுத்து விசாரணை
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணை நடத்த புதுவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோகன் கமல், பிரதீப்குமார் ஆகியோரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக புதுச்சேரி நீதிமன்றத்தில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் மீதான விசாரணை நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இதற்கிடையே புதுவையில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தேசிய புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்கள் மத்திய அரசின் அனுமதி கேட்டுள்ளனர். அனுமதி கிடைத்தவுடன் தேசிய புலனாய்வு பிரிவினரும் விசாரணையை தொடங்குவார்கள்.