திருடு போய் மீட்கப்பட்ட கோபுர கலசங்களுக்கு பிரதிஷ்டை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...!
விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மன் திருடு போய் மீட்கப்பட்ட கோபுர கலசங்களுக்கு பிரதிஷ்டை விழா நடைபெற்றது.;
விருத்தாசலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 28-ம் தேதி இரவு விருத்தாம்பிகை அம்மன் கோபுரத்தில் இருந்த தங்க முலாம் பூசப்பட்ட மூன்று கலசங்களை மர்ம நபர்களால் திருடப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில், மூன்று கலசங்களும் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருடு போய் மீட்கப்பட்ட கோபுர கலசங்களுக்கு பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டு விருத்தாம்பிகை அம்மன் கோபுரத்தில் மீண்டும் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இந்த விழாவில் 3000-க்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கலசங்கள் பிரதிஷ்டையை கண்டு களித்தனர்.