"யூடியூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது" - அன்புமணி ராமதாஸ்
யூடியூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
யூடியூப் வழிகாட்டுதலில் மகப்பேறு பார்க்கும் அறிவீனம் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அதை அகற்றுவதுடன் மகப்பேறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மகளிருக்கான மகப்பேறு கால நிதியுதவியை ரூ.18 ஆயிரத்திலிருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும்.
தமிழகத்தில் தாய்மார்கள் இறப்பு விகிதம் 58 ஆக உள்ள நிலையில், அதை 2023-ஆம் ஆண்டில் 25 ஆக குறைக்க வேண்டும். இது மிகவும் சவாலானது. ஆரம்ப சுகாதார நிலையங்களையும், 108 அவசர ஊர்திகளையும் அதிகரிப்பது உள்ளிட்ட மருத்துவக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும்.
2017-18 காலத்தில் மகப்பேற்றின் போது தாய்மார்கள் இறக்கும் விகிதத்தில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக கேரளம், மராட்டியத்துக்கு அடுத்த படியாக இருந்த தமிழகம் இப்போது தெலுங்கானாவுக்கு பின் சென்றிருப்பது கவலையளிக்கிறது.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.