நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் மஹால்- ‘தந்தி' டி.வி. நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார்

நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் மஹாலை ‘தந்தி' டி.வி. நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார்.;

Update: 2022-03-14 05:02 GMT
சென்னை, 

சென்னை தாம்பரம், வரதராஜபுரத்தில் உள்ள கிருஷ்ணாநகரில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் சார்பில் கட்டப்பட்டு இருக்கும் மஹால், கிளை அலுவலகம், ஐ.ஏ.எஸ். அகாடமி கட்டிடத்தை திறக்கும் முப்பெரும் விழா நேற்று நடந்தது.

விழாவுக்கு நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார் தலைமை தாங்கினார். ‘தந்தி' டி.வி. நிர்வாக இயக்குனர் பா.ஆதவன் ஆதித்தன், ‘நியூஸ் 7' தமிழ் டி.வி. நிர்வாக இயக்குனர் வி.சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திசையன்விளை ஜே.ஏ.எம்.எஸ். மரைன் கல்லூரி செயலாளர் எஸ்.ஜி.ராஜேஷ் வரவேற்புரையாற்றினார். நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் செயலாளர் ஆர்.சண்முகவேல் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் ஆட்சிக்குழு தலைவர் வி.எஸ்.கணேசன் நாடார், தட்சணமாற நாடார் சங்கத்தின் காரிய கமிட்டி உறுப்பினர் வி.தங்கவேலு நாடார், மும்பை கிளையின் செயலாளர் எம்.எஸ்.காசிலிங்கம் நாடார், சென்னை கிளை செயலாளர் எஸ்.ராஜேந்திரன் நாடார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கனவுகளை நிறைவேற்றுவோம்

முப்பெரும் விழாவில் முதலாவதாக தட்சணமாற நாடார் சங்கத்தின் மஹாலை, பா.ஆதவன் ஆதித்தன் திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து முதல் தளத்தில் பெருந்தலைவர் காமராஜர், ‘தினத்தந்தி' அதிபர் பா.சிவந்தி ஆதித்தனார் ஆகியோரின் பெரிய அளவிலான உருவப்படத்தை பா.ஆதவன் ஆதித்தன், வி.சுப்பிரமணியன் ஆகியோர் திறந்து வைத்தனர். விழாவில் பா.ஆதவன் ஆதித்தன் பேசியதாவது:-

நான் சிறுவனாக இருக்கும்போது தாத்தாவுடன் (பா.சிவந்தி ஆதித்தனார்) திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தேன். கோவில்மணி அங்கு இருந்தது. அது எட்டவில்லை. அப்போது தாத்தா என்னை தோளில் அமரவைத்து, அந்த மணியை அடிக்க வைத்தார். 

எங்கள் ஊர், இந்த ஊர்தான் என்று அன்று நான் முடிவு செய்தேன். இங்கே நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. அதனால்தான் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தை மீண்டும் தொடங்கி வைத்தேன். சாதி, மதம் ஆகியவற்றை மறந்து, தாத்தாவின் திட்டம், கனவுகள் அனைத்தையும் நாம் நிறைவேற்றி வைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

ஐ.ஏ.எஸ். அகாடமி திறப்பு

அதனைத்தொடர்ந்து பிற்பகலில் அதே கட்டிடத்தில் நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் கிளை அலுவலகத்தை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியின் ஆட்சிக்குழு தலைவர் வி.எஸ்.கணேசன் நாடார் திறந்து வைத்தார். மாலையில் நடந்த நிகழ்ச்சியில் கட்டிடத்தின் 2-வது தளத்தில் தட்சண ஐ.ஏ.எஸ். அகாடமி கட்டிடத்தை புதுச்சேரி அரசு செயலாளர் எஸ்.டி.சுந்தரேசன் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் மாநில தலைவர் எஸ்.ஆர்.எஸ்.சபேஷ் ஆதித்தன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஏ.ஆறுமுகநயினார், ஏ.கணேசா, மும்பை கிளை செயலாளர் ராஜ்குமார், தட்சணமாற நாடார் சங்கத்தின் இயக்குனர் கருங்கல் ஜார்ஜ் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்