அரசு வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ. 15 லட்சம் மோசடி...!
அரசு வேலை வாங்கி தருவதாக என்ஜினீயரிடம் ரூ. 15 லட்சம் மோசடி செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை,
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவன். இவரது மகன் முருகன் ( வயது 25) என்ஜினீயர், கோவை சூலூர் எஸ்.எல்.எஸ். நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். முருகன் படித்துமுடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்து உள்ளார்.
இந்த நிலையில் முருகனை சூலூரைச் சேர்ந்த பிரதீப் என்பவர் சந்தித்து, தனக்கு சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கடந்த 10 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வரும் தன்யா என்பவர் நன்கு தெரியும். அவரிடம் பணம் கொடுத்தால் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அரசுப்பணி வாங்கித் தருவதாக தெரிவித்துள்ளார் என்று கூறியுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய முருகன் பிரதீப்பிடம் 3 தவணைகளில் ரூ.15 லட்சம் கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பல நாட்கள் ஆகியும் வேலை கிடைக்கவில்லை.பணத்தையும் திரும்ப கொடுக்க வில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை என்ஜினீயர் முருகன் உணர்ந்து உள்ளார்.
இதுகுறித்து முருகன் சிங்கநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில்,
தன்யா இ.எஸ்.ஐ மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்க்கவில்லை என்பது தெரியவந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த தன்யா சிங்காநல்லூரில் வசித்துவருகிறார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. எந்த வேலையும் பார்க்கவில்லை. பிரதீப் என்பவர் இவரிடம் 10 ஆண்டுகளாக டிரைவராக வேலை பார்த்து வருகிறார் என்பதும் தெரியந்துள்ளது.
தற்போது தன்யா மற்றும் பிரதீப் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.