திண்டுக்கல் கொசவப்பட்டி ஜல்லிக்கட்டு - 600-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பு
போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஊர் பொதுமக்கள் சார்பில், உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டி புனித உத்திரிய மாதா கோவில் திருவிழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி, கொசவப்பட்டியில் இன்று நடைபெற்று வருகிறது.
போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஊர் பொதுமக்கள் சார்பில், உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் பிரார்த்தனை செய்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில், முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. போட்டி வழக்கத்தின்படி அதனை யாரும் பிடிக்கவில்லை.
அதன் பின்னர் திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட 600-க்கும் மேற்பட்ட காளைகள், வாடிவாசல் வழியாக ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கி தங்கள் வீரத்தை பறைசாற்றினர். போட்டியின் முதல் சுற்றில் ஒருவர் காயமடைந்தார்.
இந்த போட்டியைக் காண சுற்றுப்புற ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளனர். மாடுகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, கட்டில், பீரோ உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன.