சுற்றுலா வந்த உக்ரைன் நாட்டினர் 22 பேர் திருவண்ணாமலையில் தவிப்பு

சுற்றுலாவுக்கு வந்த உக்ரைன் நாட்டினர் 22 பேர் நாடு திரும்ப முடியாமல் திருவண்ணாமலையில் தவித்து வருகிறார்கள்.;

Update: 2022-03-10 20:38 GMT
திருவண்ணாமலை,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனில் சிக்கி தவித்து வரும் இந்தியர்களை மத்திய, மாநில அரசுகள் மீட்டு வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் நாட்டை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சுற்றுலாவாக இந்தியாவிற்கு வந்து பல்வேறு நகரங்களில் தங்கி உள்ளனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையிலும் பலர் தங்கி உள்ளனர்.

அவர்கள் உக்ரைனில் நடைபெற்று வரும் போரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை பெரும்பாக்கம் ரோட்டில் ‘குளோபல் வாட்ச் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சமூக சேவகர் வி.எஸ்.சத்யன் என்பவர் அவரது சொந்த விடுதியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த 4 ஆண்கள் உள்பட 22 பேருக்கு இலவசமாக உணவு மற்றும் உடை கொடுத்து தங்க வைத்துள்ளார்.

அரசு உதவ வேண்டும்

இதுகுறித்து அவர் கூறுகையில், போரால் சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாமல் உக்ரைனை சேர்ந்த மக்கள் தவித்து வருவதாக தகவல் அறிந்தேன்.

உக்ரைனை சேர்ந்தவர்கள் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்டேன். இதையறிந்த திருவண்ணாமலைக்கு சுற்றுலாவிற்காக வந்தவர்கள் மட்டுமின்றி பெங்களூரு, ரிஷிகேஷ் பகுதியில் இருந்தும் உக்ரைனை சேர்ந்தவர்கள் என்னை தொடர்பு கொண்டனர்.

தற்போது எனது விடுதியில் 22 பேர் தங்கியுள்ளனர். இங்கு தங்கி இருக்கும் இவர்களுக்கு திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு செல்லவும், கிரிவலம் செல்லவும் தேவையான வசதிகள் செய்து கொடுத்து உள்ளேன். இவர்களுடைய சுற்றுலா விசா காலம் முடிய வாய்ப்புகள் உள்ளது. எனவே உக்ரைன் நாட்டில் நிலைமை சீராகி அவர்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பி செல்லும் வரை திருவண்ணாமலையில் உள்ள ‘யாத்திரி நிவாஸ்’ போன்ற அரசின் தங்கும் விடுதிகளில் தங்க வைத்து தேவையான உதவிகளை செய்ய மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்