சட்டம்- ஒழுங்கு: உங்களது கரங்களில் தான் உள்ளது - போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை
அரசின் நோக்கங்கள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, மக்கள் நலன், சமுதாய நல்லிணக்கம், குற்றங்கள் குறைந்த ஒரு வாழ்க்கை முறை இதனைக் கொண்டுவர வேண்டியது உங்களது கரங்களில் தான் உள்ளது.
சென்னை,
காவல்துறை அலுவலர்கள் மாநாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில்,
அனைவருக்கும் வணக்கம்.
காவல்துறை- அமைச்சரவையில் எனது கட்டுப்பாட்டில் இருக்கின்ற துறை. நாம் ஆட்சிப் பொறுப்பேற்றப் பிறகு பல்வேறு இடர்களை எதிர்கொண்டபோதிலும் சிறப்பாகப் பணியாற்றிய காவல்துறையினருக்கு முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏற்கனவே நான் சொன்னதுபோல- இது, ‘சமூக வலைதள யுகம்’! இந்தச் சமூக வலைதளத்தில்- எல்லோருடைய கைகளிலும் செல்போன் வந்துவிட்டது.
காவல்துறையின் பெரிய கவலையாகவும் பணியாகவும் இருக்கப்போவது சமூக வலைதளங்களால் ஏற்படும் பிரச்சினைகளைத் தடுப்பதும் அதன் மேல் உடனடி நடவடிக்கை எடுப்பதும்தான்.
இன்னும் சொல்லவேண்டுமென்றால் நாட்டில் ஏற்படுகிற சாதி – மத மோதல்களுக்கும் உள்நாட்டுப் பாதுகாப்புக்கு இடையூறு ஆகியவற்றுக்கும் தொடக்கப்புள்ளியாக இருப்பது- இந்த சமூக வலைதளம்தான்.
இங்கு பல்வேறு தலைப்புகளில் பேசுபவர்கள் களத்தில் ஆற்ற வேண்டிய பணிகளோடு ஆன்லைனில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் உங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அதனை தொடர்ந்து, இன்றைய மாலை அமர்வில் பேசிய அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களும் - காவல் ஆணையர்களும் - உயர் அதிகாரிகளும் - உங்கள் கருத்துகளை தெளிவாக எடுத்துச் சொன்னீர்கள்.அதற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உரிய பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, தேவையான இனங்களில் உரிய நடவடிக்கையும் எடுக்கப்படும் என்பதை முதற்கண் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நமது மாநிலம் ஒரு அமைதியான வாழ்வினை ஒவ்வொரு சராசரி குடும்பத்திற்கும், தொழில் நிறுவனத்திற்கும் மற்றும் பல்வேறு வணிக அமைப்புகளுக்கும், கல்வி அமைப்புகளுக்கும் வழங்கி, நாட்டிற்கே ஒரு முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. இதற்குக் காரணம், இங்கு நிலவும் அமைதியான சட்டம்-ஒழுங்கு நிலைமைதான். இதனை முன்வைத்துத்தான் மக்கள் ஒரு அரசினை, அங்கு நடக்கின்ற ஆட்சியினைப் பற்றிய மதிப்பீட்டைச் செய்கிறார்கள்.
இதர அரசுத் துறைகளுக்கும், காவல் துறைக்கும் உள்ள இந்தப் பெரிய வேறுபாட்டினை நீங்கள் உணர வேண்டும். இதனை எப்போதும் நெஞ்சில் நிறுத்தி நீங்கள் செயல்பட வேண்டும்.
குறிப்பாக, ஓரிரு விஷயங்களை உங்களுக்கு இத்தருணத்தில் தெரிவிக்க விரும்புகிறேன்.
சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகளில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்கள், கள நிலவரத்திற்கு ஏற்ப, சட்ட வரம்பிற்குட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை அவர்களாகவே மேற்கொள்ள வேண்டும். இதற்குத் தனியாக மேலிடத்திலிருந்து ஆணை வர வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை, காத்திருக்கவும் கூடாது.
அடுத்து, உயர் அலுவலர்கள் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படும் நேரங்களில், நேரடியாக களத்திற்குச் சென்று, பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும். இது சார்-நிலை அலுவலர்களுக்கு தெம்பும், தைரியமும் அளிப்பதாக அமையும். மக்களின் ஆதரவும் இதனால் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்.
இன்னொரு முக்கியமான விஷயத்தையும் இங்கு குறிப்பிட வேண்டுமென்று நினைக்கிறேன். அது, சார்-நிலைக் காவலர்கள் அவர்களது அலுவல் ரீதியான பிரச்சினைகள் மற்றும் தேவைகளை உணர்ந்து, அவர்களை ஊக்குவித்து, நீங்கள் உங்களது குழுவை அமைத்துக் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் Team Building என்று இதனைக் குறிப்பிடுவார்கள். அப்போதுதான் நீங்கள் காவல் கண்காணிப்பாளராக மட்டுமல்லாமல், ஒரு லீடராகவும் அவர்களின் முழு ஒத்துழைப்பைப் பெறக்கூடியவர்களாகவும் விளங்க முடியும்.
அரசின் நோக்கங்கள் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது, மக்கள் நலன், சமுதாய நல்லிணக்கம், குற்றங்கள் குறைந்த ஒரு வாழ்க்கை முறை இதனைக் கொண்டுவர வேண்டியது உங்களது கரங்களில் தான் உள்ளது. அதனை நீங்கள் செயல்படுத்திட வேண்டுமென்று உங்களை எல்லாம் இந்த நேரத்திலே கேட்டுக் கொண்டு, இந்த அளவோடு மாலை அமர்வு நிகழ்ச்சியை முடித்துக் கொள்கிறோம், நன்றி, வணக்கம்.