பொது இடத்தில் தூக்கி வீசுவதை தடுக்க விழிப்புணர்வு மது பாட்டில்களில் வீட்டு அலங்காரப் பொருட்கள் கல்லூரி மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

மது பாட்டில்களில் வீட்டு அலங்காரப் பொருட்கள் கல்லூரி மாணவிக்கு அமைச்சர் பாராட்டு

Update: 2022-03-09 13:14 GMT
காரைக்கால்
காரைக்கால் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை சார்பில், மகளிர்தின விழா காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு குழந்தைகள் நலத்திட்ட அதிகாரி சத்யா தலைமை தாங்கினார். விழாவில், அமைச்சர் சந்திர பிரியங்கா, துணை கலெக்டர் ஆதர்ஷ் மற்றும் கல்லூரி மாணவிகள், பெண்கள் கலந்து கொண்டனர். விழாவில், கல்லூரி மாணவிகள், பெண்கள் பல்வேறு தலைப்புகளில் கண்காட்சி நடத்தினர்.
இதில் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரி மாணவி பெனினா மது பாட்டில்களை வீட்டு அலங்காரப் பொருட்களாக மாற்றி காட்சிப்படுத்தி இருந்தது அனைவரையும் கவர்ந்தது. 
இதனை பார்த்த அமைச்சர் சந்திரபிரியங்கா, மது பாட்டில்களில் வீட்டு அலங்கார பொருட்கள் உருவாக்கும் எண்ணம் தோன்றியது எப்படி? என்பது குறித்து கேட்டார். அப்போது மாணவி பெனினா கூறியதாவது:-
கொரோனா ஊரடங்கின் போது, நான் வசித்த பகுதிகளில் அதிகமான மது பாட்டில்கள் கிடந்தது. அவற்றில் பல உடைந்து, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்தது. அதை அப்புறப்படுத்தினேன். முழு பாட்டில்களை சேகரித்து வீட்டு அலங்காரப் பொருட்களாக மாற்றினேன். 
இனி பொது இடத்தில் மது அருந்துவதை அனைவரும் கைவிடவேண்டும். மது பாட்டில்களை உடைப்பதால் அது பலருக்கு இன்னலை உருவாக்கும் என்பதை வலியுறுத்தும் வகையில், மது பாட்டில்களால் வீட்டு அலங்கார பொருட்களை உருவாக்கினேன். 
இவ்வாறு அவர் கூறினார். 
இதைத்தொடர்ந்து மாணவி பெனினாவை பாராட்டியதுடன் மலர் கிரீடம் அணிவித்து அமைச்சர் சந்திர பிரியங்கா வாழ்த்தினார்.

மேலும் செய்திகள்