மேகதாது பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்

மேகதாது பிரச்சினை: அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.

Update: 2022-03-07 21:16 GMT
சென்னை,

பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக்கு அனுமதி வழங்கும்படி மத்திய அரசை வலியுறுத்த டெல்லி செல்லவிருப்பதாகவும், அதற்கு முன் மேகதாது சிக்கல் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தவிருப்பதாகவும் கர்நாடக முதல்-மந்திரி கூறியிருக்கிறார். மேகதாது விவகாரத்தை மேலும் சிக்கலாக்கத் துடிக்கும் கர்நாடகத்தின் முயற்சி கண்டிக்கத்தக்கது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு அடுத்த ஓராண்டிற்குள் தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது. அந்தத் தேர்தலில் அரசியல் லாபம் தேடுவதற்காக கர்நாடகத்தை ஆளும் பாரதீய ஜனதா கட்சியும், எதிர்க்கட்சியான காங்கிரசும் அடுத்தடுத்து பல நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன. கர்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் நோக்கத்தை புரிந்து கொண்டு, அவற்றை முறியடிப்பதற்கான பதில் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.

அதற்கான உத்திகளை வகுப்பது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழக அரசு விரைவில் நடத்த வேண்டும். அணை கட்ட அனுமதி அளிக்கக் கூடாது என்று பிரதமரிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவினர் நேரில் வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்