ஆரணி அருகே இரு தரப்பினர் இடையே தகராறு - போலீஸ் தடியடி, பொதுமக்கள் காயம்
கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே பிரச்சினை ஏற்படவே, சாலைமறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.;
திருவண்னாமலை,
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த தேவிகாபுரம் 500 ஆண்டுகள் பழமையான பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 13 நாட்கள் நடைபெறும். இதில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் ஒரு நாள் திருவிழா நடத்துவதற்கு பட்டியலின வகுப்பை சேர்ந்த நபர் நடத்துவதற்கு வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், தேவிகாபுரம் பகுதியில் ஒரு தரப்பினர் திரு விழாவை நடத்த வேண்டும் என்று கடைகளை அடைத்து விட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 5 மணி நேரமாக, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டக்காரர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை உடன்படாத காரணத்தினால், போராட்டக்காரர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
ஆகம விதிமுறைப்படி பல ஆண்டுகளாக இந்த கோவில் திருவிழா சுமுகமாக நடைபெற்று வருகிறது. தற்போது இதில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள், 'நாங்கள் ஒருநாள் திருவிழாவை நடத்த வேண்டும்' என்று போர்க்கொடி தூக்குவது தான் இந்த பிரச்சினைக்கு காரணமாக உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.