மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே சுமுகமாக பேசி தீர்வு எல்.முருகன் பேட்டி

மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக இரு மாநிலங்கள் இடையே சுமுகமாக பேசி தீர்வு காணப்படும் என்று மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.;

Update: 2022-03-06 22:17 GMT
 சென்னை,

பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் மூலமாக நடைபெற்றுவரும் ஒரு வார கால சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சவுகார்பேட்டையில் மத்திய மந்திரி எல்.முருகன் நேற்று நேரில் பார்வையிட்டார். மேலும் அங்கு வந்திருந்த பயனாளிகளுடன் கலந்துரையாடிய அவர், அவர்களுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை வழங்கினார்.

பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மத்திய அரசின் மக்கள் மருந்தகங்கள் மூலம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றன. ஏழைகளுக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே இந்த மக்கள் மருந்தகங்களின் நோக்கம். இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் 8 ஆயிரத்து 675 இடங்களில் மருத்துவ முகாம் நடக்கிறது. மக்கள் மருந்தகங்கள் மூலம் ஆயிரத்து 451 வகையிலான மருந்துகளும், 240-க்கும் மேல் அறுவைசிகிச்சை உபகரணங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

மீட்புப்பணி தொடரும்

பிரதமரின் வீட்டு வசதி திட்டம், தனிநபர் கழிவறைத் திட்டம், இலவச எரிவாயு இணைப்பு, ஆயுஷ்மான் பாரத் போன்ற திட்டங்கள் தமிழகத்தில்தான் அதிகளவில் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முத்ரா வங்கிக்கடன், விவசாயிகளுக்கான 6 ஆயிரம் நிதியுதவி திட்டமும் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் 90 சதவீதம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். கடைசி மாணவரை மீட்கும் வரை மீட்புப்பணி தொடரும். இதற்காக 4 மூத்த மந்திரிகள் கடும் பனியிலும் களத்தில் உள்ளனர். உக்ரைனில் இருந்து இதுவரை 15 ஆயிரம் மாணவர்கள் வரை மீட்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களை சர்வதேச தரத்துக்கு உயர்த்த ‘நீட்’ அவசியம். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் திறப்பினால் இந்த ஆண்டு 5 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தகுதித்தேர்வு என்பது அனைத்து படிப்பு மாணவர்களுக்கும் இருக்கிறது.

தீர்வு

மேகதாது திட்டம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகமான முறையில் பேசி தீர்வு காணப்படும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் சாத்தியம் என்பதாலேயே அதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநிலங்களின் திட்டம் தொடர்பான விளக்க அறிக்கை வந்தவுடன் மத்திய அரசு இந்த திட்டத்தை தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்