குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை..!
கிருஷ்ணகிரி அருகே குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்று தாயும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நடுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காயத்திரி (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (39). இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தனிஷ்கா (7) என்ற மகளும், தர்மன் (4) என்ற மகனும் இருந்தனர். வெங்கடேசன் திருப்பதியில் தொப்பி வியாபாரம் வருகிறார். பெரும்பாலான நாட்கள் அங்கேயே இருப்பார். அவ்வபோது தனது ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.
வெங்கடேசனின் தாய் உதயசந்திரா (75) மருமகள் காயத்திரியுடன் இருந்து வருகிறார். இந்த நிலையில் இன்று மதியம் 3.30 மணி அளவில் காயத்திரி குழந்தைகளுடன் சாப்பிட்டு விட்டு குழந்தைகளுடன் மாடி அறையில் தூங்க செல்வதாக அழைத்து சென்றார். சிறிது நேரம் கழித்து காயத்திரி மட்டும் கீழே வந்தார்.
பின்னர் அவர் நாற்காலி ஒன்றை எடுத்தபடி மேலே மாடி அறைக்கு சென்றார். இதை கவனித்த மாமியார் உதயசந்திரா எதற்காக நாற்காலியை எடுத்து செல்கிறாய் என கேட்டார். அதற்கு காயத்ரி கயிறு கட்ட வேண்டி உள்ளது என கூறினார். இந்த நிலையில் மாடிக்கு சென்ற காயத்ரி மற்றும் குழந்தைகள் நீண்ட நேரமாகியும் கீழே வராததால் உதயசந்திரா சந்தேகம் அடைந்தார்.
அவர் மேலே சென்று பார்த்த போது மாடியில் விட்டத்தில் குழந்தைகள் 2 பேருடன் காயத்திரி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதை பார்த்த உதயசந்திரா அதிர்ச்சி அடைந்தார். அவர் இது குறித்து அக்கம் பக்கத்தினருக்கு தெரிவித்தார். அவர்கள் இது குறித்து மத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அலெக்சாண்டர், மத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்ட காயத்திரி மற்றும் குழந்தைகள் 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினையில் காயத்திரி தனது குழந்தைகள் 2 பேரையும் தூக்கில் தொங்க விட்டு கொலை செய்து, பின்னர் தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது தொடர்பாக மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மத்தூர் அருகே குடும்ப தகராறில், 2 குழந்தைகளை கொன்று விட்டு தாயும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.