டிராக்டர் விற்பனை நிறுவன மேலாளர் பலி

வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பார்சல் சர்வீஸ் லாரி மோதியதில் டிராக்டர் விற்பனை நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-03-05 17:53 GMT
வில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது பார்சல் சர்வீஸ் லாரி மோதியதில் டிராக்டர் விற்பனை நிறுவன மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனியார் நிறுவன மேலாளர்
புதுச்சேரி ஏம்பலம் புதுக்குப்பம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 49). கடலூரில் உள்ள டிராக்டர் விற்பனை நிறுவனத்தில் மேலாளராக   பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி யமுனாராணி, கதிர்காமம் அரசு மருத்துவக்    கல்லூரியில் உதவி       பேராசிரியராக உள்ளார். இவர்களுக்கு ஜெயநந்தினி என்ற மகளும், திலக்ராஜ் என்ற மகனும் உள்ளனர். சண்முகவேல்   நேற்று  இரவு வில்லியனூரில் உள்ள ஒரு மெக்கானிக் கடைக்கு வந்துவிட்டு, புதுச்சேரி 100 அடி ரோட்டில் உள்ள மற்றொரு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
லாரி சக்கரத்தில் சிக்கினார்
வில்லியனூர் - புதுச்சேரி சாலையில்     வி.தட்டாஞ் சாவடி பகுதியில் வந்தபோது, பின்னால் வேகமாக வந்த பார்சல்    சர்வீஸ்   லாரி  மோட்டார் சைக்கிள் மீது திடீரென்று  மோதியது.  இதில் லாரி சக்கரத்தில் சிக்கி சண்முகவேல் படுகாயம் அடைந்தார். 
அவரை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே சண்முகவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 
டிரைவர் மீது வழக்கு
இதுபற்றி தகவல் அறிந்து அங்கு   வந்த    அவரது மனைவி மற்றும் உறவினர்கள்,       சண்முகவேலின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். விபத்து தொடர்பாக பார்சல் லாரி டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த சோலைமுத்து  (45)   மீது  போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்