கரூர் மாநகராட்சி முதல் மேயராக கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு

கரூர் மாநகராட்சி முதல் மேயராக கவிதா கணேசன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தாரணி சரவணன் துணை மேயரானார்.

Update: 2022-03-04 19:33 GMT
கரூர், 
தி.மு.க. கைப்பற்றியது
கரூர் மாநகராட்சி முதல் முறையாக மேயர் தேர்தலை சந்தித்து உள்ளது. இதில் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் தி.மு.க. 42 வார்டுகளிலும், அ.தி.மு.க. 2 வார்டுகளிலும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 2 வார்டிலும் வெற்றி பெற்றனர். இதையடுத்து கரூர் மாநகராட்சியை தி.மு.க. கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து கரூர் மாநகராட்சியில் வெற்றிபெற்ற 48 கவுன்சிலர்கள் கடந்த 2-ந்தேதி பதவியேற்று கொண்டனர்.
கரூர் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளராக கவிதா கணேசனும், துணை மேயர் வேட்பாளராக தாரணி சரவணனும் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
போட்டியின்றி தேர்வு
இந்தநிலையில், கரூர் மாநகராட்சி கூட்ட அரங்கில் நேற்று மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி காலை 9 மணி முதலே மாநகராட்சி அலுவலகத்திற்கு கவுன்சிலர்கள் வரத்தொடங்கினர். அவர்களிடம் வருகை பதிவேட்டில் கையெழுத்து பெறப்பட்டது. அ.தி.மு.க.வை சேர்ந்த 2 கவுன்சிலர்கள் மேயர் மறைமுக தேர்தலில் பங்கேற்கவில்லை.
காலை 9.30 மணியளவில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், தி.மு.க. சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த கவிதா கணேசன் மேயர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் வேட்புமனுதாக்கல் செய்யவில்லை. இதனால் கரூர் மாநகராட்சி முதல் மேயராக கவிதா கணேசன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதா கணேசனுக்கு, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் மேயருக்கான சிவப்பு அங்கி மற்றும் செங்கோலை வழங்கினார்.
துணை மேயர்
பின்னர் கரூர் மாநகராட்சி துணை மேயர் பதவிக்கு மதியம் 2.30 மணியளவில் மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில், தி.மு.க. சார்பில் கரூர் மாநகராட்சி துணை மேயராக அறிவிக்கப்பட்ட தாரணி சரவணன் துணை மேயர் பதவிக்கு வேட்புமனுதாக்கல் செய்தார். இவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாததால் கரூர் மாநகராட்சி துணை மேயராக தாரணி சரவணன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் அறிவித்தார். இதையொட்டி கட்சி நிர்வாகிகள் அவருக்கு வெள்ளி வாள் பரிசாக அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து கரூர் மாநகராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
அண்ணா சிலைக்கு மாலை
இதையடுத்து, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மாநகராட்சி கூட்ட அரங்கில் பேசியதாவது:- இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் இணைந்து தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் முதன்மை மாநகராட்சியாக கரூர் மாநகராட்சியை மாற்ற சிறப்பாக பாடுபட வேண்டும். மேலும் தமிழக முதல்-அமைச்சரின் ஆட்சிக்கு மென்மேலும் மெருகூட்டும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன், என்றார்.
பின்னர் கரூர் பஸ்நிலையம் அருகே மனோகரா ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு மேயர் கவிதா கணேசன் மற்றும் துணை மேயர் தாரணி சரவணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். 
மேயர் மற்றும் துணை மேயர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த தி.மு.க. தொண்டர்கள் கரூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்