ஆவின் பொருட்கள் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2022-03-04 18:58 GMT
சென்னை,

ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்துவிட்டு, இன்றைக்கு ஆவின் பொருட்களின் விலையை தி.மு.க. அரசு உயர்த்தியுள்ளதைப் பார்க்கும்போது, ஒரு பக்கம் மக்களுக்கு கொடுப்பது போல் கொடுத்துவிட்டு மறுபக்கம் அவற்றை பிடுங்கும் முயற்சியில் ஈடுபடுவது தெளிவாகத் தெரிகிறது. இது ஏழை, எளிய மக்களை ஏமாற்றும் செயல். தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

27 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ½ லிட்டர் தயிர் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதாவது, லிட்டருக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. அதேபோல், 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய் விலை 535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 200 கிராம் பாதாம் பவுடர் 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாக, அதாவது 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

திரும்ப பெறவேண்டும்

சிறிய ஐஸ்கிரீம் வகைகளும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. யாரும் எதிர்பாராத விதமாக பால் உப பொருட்களின் விலையை உயர்த்தி மக்கள் மீது தி.மு.க. அரசு கூடுதல் சுமையை சுமத்தியுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய வேண்டும் என்ற நோக்கில் பால் உப பொருட்களின் விலையை அரசு உயர்த்தியுள்ளதாக பொதுமக்கள் நினைக்கிறார்கள். ஆவின் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே பரவலாக உள்ளது.

எனவே, முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, ஆவின் பொருட்களுக்கான விலை உயர்வினை ரத்து செய்ய வேண்டுமென்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்