யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.;

Update: 2022-03-04 18:12 GMT
யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி நாராயணசாமி கூறினார்.

கலந்தாய்வு கூட்டம்
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் சிறப்புக்கூறு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த கலந்தாய்வு கூட்டம் அக்கார்டு ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மந்திரி நாராயணசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.சரவணன் குமார், செல்வ கணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை செயலர் அஸ்வனி குமார். அரசு துறை செயலாளர்கள் மற்றும் துறை தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
விவாதிக்கப்பட்டது
கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ள 21 துறைகளில் மத்திய அரசு நிதி பங்களிப்பு மற்றும் சிறப்புக்கூறு நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது மத்திய மந்திரி நாராயணசாமி பல துறைகளின் செயல்பாடுகள் தொடர்பாக கேள்விகளை எழுப்பினார்.
மேலும் ஆதிதிராவிட மக்களுக்கான திட்டங்களை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
100 சதவீதம் மேம்படுத்த வேண்டும்
புதுச்சேரி அரசு துறைகளில் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சிறப்புக்கூறு நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்று தலைமை செயலாளருக்கு தெரிவித்துள்ளேன். அதிக துறைகளில் நிதியை செலவு செய்வதில் இடைவெளி உள்ளது. 
குறிப்பாக அனைத்து கிராமங்களுக்கும் நிதி சரியாக செலவிடப்படவில்லை. மத்திய அரசு தாராளமான நிதி வழங்கி வருகிறது. அதனை முழுமையாக செலவு செய்து திட்டங்களை 100 சதவீதம் மேம்படுத்த வேண்டும். 
மத்திய அரசின் நிதி பங்களிப்பு மற்றும் சிறப்புக்கூறு நிதியில் மத்திய அரசு திட்டங்களில் 62 சதவீதம் மட்டுமே புதுச்சேரியில் செலவிடப்பட்டுள்ளது. யு.பி.எஸ்.சி. தேர்வு எழுத விரும்பும் ஆதிதிராவிட மாணவர்களுக்கு புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மூலம் சிறப்பு மையம் அமைக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் பா.ஜ.க. அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
  முன்னதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணை மந்திரி நாராயணசாமி நேற்று  புதுச்சேரி வந்தார். அவர் மரியாதை நிமித்தமாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் சந்தித்து பேசினார்.

மேலும் செய்திகள்