அரசு பள்ளி மாணவர்களுக்கு மட்டும் மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடா? ஐகோர்ட்டு கேள்வி

ஒரே மாதிரியான படிப்பை படிக்கும் நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் என்ற அடிப்படையில் மருத்துவ கல்வியில் சேருவதற்கு இடஒதுக்கீடு வழங்க முடியுமா? என்று சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2022-03-03 22:41 GMT
சென்னை,

மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை எதிர்த்து அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்கள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

பொதுபிரிவுக்கு பாதிப்பு

அப்போது, இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஸ்ரீராம்பஞ்சு, ‘‘தமிழகத்தில் ஏற்கனவே 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தும்போது, 31 சதவீத பொதுப்பிரிவினருக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. அதுமட்டுமல்ல நீட் தேர்வை நீர்த்து போகச்செய்யும் வகையில் இந்த இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது என்று மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் சுட்டிக்காட்டி உள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இதுபோல இடஒதுக்கீடு வழங்குவதால், தகுதியான மாணவர்கள் மருத்துவக்கல்வியில் சேர முடியாத நிலை ஏற்படுகிறது’’ என்று வாதிட்டார்.

ஏழை மாணவர்கள்

தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், ‘‘மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்கள் சேர முடியாத நிலை உள்ளது. அதனால்தான் இந்த இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பெரும்பாலும் ஏழை மாணவர்கள்தான் படிக்கின்றனர். அவர்கள் நிலை மற்றும் சமுதாயத்தில் எந்த பிரிவைச் சேர்ந்தவர் என்பதையும் ஆராய வேண்டும். சமூக கூட்டமைப்பில் சமமற்ற நிலையை அகற்றவே இச்சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது’’ என்று கூறினார்.

முடியுமா?

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘ஒரே மாதிரியான படிப்பை படிக்கும் நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் என்ற கல்வி நிறுவனம் அடிப்படையில் இதுபோல இடஒதுக்கீடு வழங்க முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு வக்கீல் கபில்சிபல், ‘‘ஒரே படிப்பை படித்தாலும் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் மருத்துவ படிப்பில் சேருகிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும். சமநிலையற்ற கட்டமைப்பு இருப்பதால்தான், பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது’’ என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்