சசிகலா தலைமையேற்க வேண்டும்; டி.டி.வி.தினகரன் வழிநடத்த வேண்டும் கழகத்தில் கலக குரல்
சசிகலா அ.தி.மு.க.வின் தலைமையேற்க வேண்டும்; டி.டி.வி. தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என கோவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி கூறி உள்ளார்.;
சென்னை
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்விக்குப்பிறகு அ.தி.மு.க.வில் சசிகலா, தினகரன் இணைப்பு குறித்த விவகாரம் தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல், சட்டசபைத் தேர்தல், நகர்ப்புற தேர்தல் ஆகியவற்றில் அதிமுக தோல்வியை தழுவியது.
இரட்டை தலைமையிலான இந்த கட்சி இன்னும் தேயும் என்பதை உணர்ந்த சில நிர்வாகிகளும், நகர்ப்புறத் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றவர்களும் தி.மு.க.வில் இணைந்து வருகிறார்கள்.
எனவே அ.தி.மு.க.வில் தற்போது ஒற்றை தலைமை குறித்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அன்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய ஒற்றை தலைமையின் கீழ் கட்சி நடந்ததால்தான் மாபெரும் வெற்றிகளை குவிக்க முடிந்தது என்பதை இன்று பெரும்பாலானோர் உணர்ந்துவிட்டனர். அந்த ஒற்றை தலைமை எடப்பாடி பழனிச்சாமியும் இல்லாமல் ஓ.பன்னீர் செல்வமும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதுதான் பெரும்பாலானோரின் விருப்பமாக உள்ளது.
நேற்றைய தினம் தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சையது கான். இவர் தலைமையிலான தேனி அ.தி.மு.க.வினர் சசிகலா, தினகரன் ஆகியோரை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அதை ஓ.பன்னீர் செல்வத்திடம் ஒப்படைத்துள்ளார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர் செல்வத்தின் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இது போல் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் என்றால், நிச்சயம் அது ஓ.பன்னீர் செல்வம் சம்மதம் இல்லாமல் நடந்திருக்காது என்கிறார்கள்.
இந்த நிலையில் சசிகலா அ.தி.மு.க.வின் தலைமையேற்க வேண்டும்; டி.டி.வி. தினகரன் அதிமுகவை வழிநடத்த வேண்டும் என கோவை அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுக்குட்டி திடீர் என பேட்டி அளித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது
4 ஆண்டுகளுக்கு முன்னரே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி இருந்தால் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றிருக்கும். இப்போதைய அ.தி.மு.க. தலைமை சரியில்லாததால்.தான் உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.
அதிமுக வேட்பாளர்கள் சொந்த காசை செலவு செய்து இப்போது தோல்வியைத் தழுவி உள்ளனர். சசிகலா, தினகரனை சேர்க்க வேண்டும் சட்டசபை தேர்தலில் கொங்கு மண்டலத்தில் மட்டுமே அ.தி.மு.க.வுக்கு வெற்றி கிடைத்தது.
இப்போது உள்ளாட்சித் தேர்தலில் கொங்கு மண்டலமும் அ.தி.மு.க.வை விட்டு போய்விட்டது. அ.தி.மு.க.வுக்கு சசிகலா அல்லது டி.டி.வி. தினகரன் தலைமை ஏற்றால்தான் வலிமை பெற முடியும்.
ஆகையால் அ.தி.மு.க.வில் சசிகலா, டிடிவி தினகரனை மீண்டும் சேர்க்க வேண்டும். என் தனிப்பட்ட நலனுக்காக இதனை சொல்லவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து போனவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு இணைந்தால் மட்டுமே அ.தி.மு.க. மீண்டு எழும்.
சசிகலா தலைமையேற்று டி.டி.வி. தினகரன் வழிநடத்தினால் அதிமுக நல்ல நிலைக்கு வரும்; எனக்கு கட்சி பொறுப்பு தரவில்லை என்பதால் இவ்வாறு பேசவில்லை.