11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.;

Update: 2022-03-03 00:51 GMT
சென்னை,

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரை மற்றும் இலங்கை நோக்கி நகரக்கூடும். 

இதனால், இன்று (வியாழக்கிழமை) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

அதேபோல் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருச்சி, பெரம்பலூர், அரியலுர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமுட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், தமிழக கடலோர பகுதி, மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளில் இன்று சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடை இடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்