ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் தமிழக அரசுக்கு, சீமான் வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் தமிழக அரசுக்கு, சீமான் வலியுறுத்தல்.;

Update: 2022-03-01 21:39 GMT
சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு மற்றும் நியமனத் தேர்வு என்று இரண்டு தேர்வுகளை எழுத வேண்டிய நிலை இருப்பதால் ஆசிரியர் பணித் தேர்வர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு அல்லலுற்று வருகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி நியமனத் தேர்வு முறையை ரத்து செய்யாமல், காலம் கடத்தும் தி.மு.க. அரசின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.

ஒரு பணிக்கு இருதேர்வுகள் எனும் மிகத்தவறான தேர்வு முறையை தி.மு.க. அரசு உடனடியாக ரத்து செய்வதோடு, தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நேரடியாகப் பணி நியமனம் செய்வதற்கான புதிய அரசாணையை வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

மேலும், தங்களின் மிக நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழுமையான ஆதரவளித்து, போராட்டக் கோரிக்கைகள் நிறைவேற இறுதிவரை உறுதியாகத் தோள்கொடுத்து துணைநிற்கும் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்