நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவி உக்ரைனில் தவிப்பு
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவி உக்ரைனில் தவிப்பு;
நெல்லை,
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் மேற்படிப்பு படித்து வருகிறார்கள்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி புரம் மாணவர் மனோ ஜெயக்குமார், வண்ணார்பேட்டை சேர்ந்த மாணவி தீபஸ்ரீ ஆகியோர் உக்ரேனில் தவித்து வருவதாகவும், அவர்களை பத்திரமாக மீட்டு அழைத்து வர வேண்டும் என்று அவர்களது பெற்றோர்கள் மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவி உக்ரைனில் தவிர்த்து வருவது தெரியவந்துள்ளது.
நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே உள்ள மணிலால்நகரைச் சேர்ந்தவர் ஞான செல்வம். இவர் தற்போது ஈராக் நாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி. இவர்களது மகள் கரோலின் ஷீபா (வயது21). இவர் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கீவ் நகரில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார் . இவரது தாயார் இந்திராணி வீடியோகால் மூலம் சமீபத்தில் மாணவியிடம் பேசியுள்ளார். அப்போது மாணவி அங்கு படும் துயரங்களையும் உணவு இல்லாமல் அவதிப்படுவதையும் கண்ணீருடன் கூறியுள்ளார்.
இது குறித்து இந்திராணி மற்றும் அவரது உறவினர்கள் நெல்லை மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
போர் நடைபெறும் உக்ரைன் நாட்டில் உள்ள கார்கீவ் பகுதியில் எனது மகள் கரோலின் ஷீபா உள்பட மேலும் 200 மாணவ- மாணவிகள் பாதாள அறையில் கடந்த 5 நாட்களாக தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு சரியான உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை . குறைந்த அளவு பிஸ்கட் மற்றும் ரொட்டி , பழங்கள் ஆகியவற்றை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகிறார்கள். சில நாட்களில் ஒருமுறை தான் அவர்களுக்கு உணவு வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. எனவே அவர்களை மத்திய- மாநில அரசுகள் இணைந்து பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வர வேண்டும்.
இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளனர்.