புதுவையில் 2 மாதங்களுக்கு பிறகு ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு

புதுவையில் கொரோனா பாதிப்பு 2 மாதங்களுக்கு பிறகு ஒற்றை இலக்கத்துக்குள் வந்துள்ளது.;

Update: 2022-02-28 16:53 GMT
புதுச்சேரி
புதுவையில் கொரோனா பாதிப்பு 2 மாதங்களுக்கு பிறகு ஒற்றை இலக்கத்துக்குள் வந்துள்ளது.

படிப்படியாக சரிவு

புதுவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை தொடர்ந்து கிடுகிடுவென பாதிப்பு உயர தொடங்கியது. 
ஜனவரி மாத இறுதியில் நாள் ஒன்றுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டனர். அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. சுமார் 2 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்துக்குள் வந்துள்ளது. கடந்த   டிசம்பர்    மாதம் 28-ந்தேதி 9 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பின் தற்போது   பாதிப்பு  ஒற்றை இலக்கத்துக்குள் வந்துள்ளது.

காரைக்காலில் பாதிப்பு இல்லை

அதாவது  காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் 871 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவருமே புதுச்சேரி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள் ஆவர். காரைக்கால், மாகி, ஏனாமில் புதிதாக யாருக்கும் பாதிப்பு இல்லை.
தற்போது ஆஸ்பத்திரிகளில் 12 பேர், வீடுகளில் 106 பேர் என 118 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர்.  33 பேர் குணமடைந்தனர். புதுவையில் தொற்று பரவல் 1.03 சதவீதமாகவும், குணமடைவது 98.74 சதவீதமாகவும் உள்ளது.

தடுப்பூசி

நேற்று  முதல் தவணை தடுப்பூசியை 53 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 251 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 9 பேரும் செலுத்திக்கொண்டனர். இதுவரை 15 லட்சத்து 90 ஆயிரத்து 849 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
===

மேலும் செய்திகள்