முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் - அமைச்சர் செஞ்சி மஸ்தான்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறினார்.
சென்னை,
உக்ரைனில் சிக்கியிருந்த மேலும் 240 இந்தியர்களுடன் ஹங்கேரி நாட்டின் புதாபெஸ்டுவில் இருந்து புறப்பட்ட மூன்றாவது விமானம் இன்று காலை 10. மணியளவில் டெல்லி வந்து சேர்ந்தது. 'ஆபரேஷன் கங்கா' திட்டத்தின் கீழ் 3-வது விமானம் டெல்லியில் தரையிறங்கியது. அதில் பயணம் மேற்கொண்டவர்களை விமான நிலைய அதிகாரிகள் வரவேற்றனர்.
அதனையடுத்து டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் 5 தமிழக மாணவர்கள் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையம் வந்தடைந்த மாணவர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முயற்சியால் மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். உக்ரைனில் இருந்து இன்று மாலை மேலும் 12 மாணவர்கள் சென்னை வர உள்ளனர். மாணவர்களின் பயண செலவு முழுவதும் அரசே ஏற்கும். பதிவு செய்துள்ள 1,800 மாணவர்களை தமிழகம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.