உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலியில் பேசினார்
உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது விரைவில் அனைவரையும் மீட்டுவிடுவதாக உறுதி அளித்தார்.;
சென்னை,
உக்ரைனில் தவித்து வரும் தமிழக மாணவர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசுடன் இணைந்து தமிழக அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தங்கள் மகன்களையும், மகள்களையும் மீட்டு தரும்படி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்தநிலையில் உக்ரைனில் சிக்கி தவிக்கும் தமிழக மாணவர்களை தொடர்பு கொள்ள சென்னையில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்றார்.
பின்னர் காணொலி காட்சி மூலம் உக்ரைனில் சிக்கியுள்ள சுகிதா, அந்தோணி உள்ளிட்ட தமிழக மாணவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது நடந்த உரையாடல் வருமாறு:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- சுகிதாவா அங்கு நிலவரம் எப்படிமா இருக்கு...?
மாணவி சுகிதா:- போலந்து வழியாக போகலாம் என்று நினைக்கிறோம். என்னுடன் 21 பேர் இருக்கிறார்கள். சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் குளிரில் போலந்து எல்லையில் எல்லோரும் பரிதவித்து கொண்டு இருக்கிறார்கள் சார்.
மு.க.ஸ்டாலின்:- சாப்பாடு கிடைக்கிறதா?
சுகிதா:- ஓரளவுக்கு கிடைக்கிறது சார்...
மு.க.ஸ்டாலின்:- தைரியமா இரும்மா, எல்லாம் கை கூடி வருது, நாங்க துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அந்த உரையாடல் அமைந்தது.
இதைத்தொடர்ந்து அந்தோணி என்ற மாணவரிடம் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அவர், ‘வணக்கம் பிரதர். அந்தோணி எப்படி இருக்கிறீர்கள்’ என்று கேட்டார். அதற்கு அந்த மாணவர், ‘முதல்-அமைச்சருக்கு வணக்கம், எப்படியாவது எங்களை இந்தியாவுக்கு அழைத்து செல்லுங்கள்’ என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘விரைவாக, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் உங்களை மீட்டு விடுவோம்’ என்று நம்பிக்கை வார்த்தைகளை கூறி ஆறுதல் அளித்தார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
உக்ரைன் நாட்டில் தற்பொழுது தங்கியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர்களான ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த மவுனி சுகிதா, திருச்சி அந்தோணி, தூத்துக்குடி நவநீத ஸ்ரீராம் ஆகியோரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு அங்குள்ள நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், அவர்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது என்றும், தாங்கள் இருக்கும் இடத்தில் பாதுகாப்பாகவும், தைரியமாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அப்போது, அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது குறித்து மாணவி சுகிதா கூறியதாவது:-
தற்போது உள்ள சூழ்நிலை குறித்து முதல்-அமைச்சர் என்னிடம் கேட்டார். போலந்து எல்லை பகுதியில் என்ன நடக்கிறது என்று கேட்டார். சாப்பிட்டீங்களா, சாப்பாடு இருக்கான்னு கேட்டார். இப்போதைக்கு பலரும் எல்லையில் தவித்து வருகிறார்கள். போலந்து போக நாங்கள் தான் ஏற்பாடு செய்ய வேண்டும். 10 கிலோ மீட்டர் நடந்துதான் செல்ல வேண்டும். அந்த அளவுக்கு கூட்டம் அதிகமாக இருக்கிறது. ஏற்கனவே எல்லையில் இருப்பவர்கள் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் குளிரில் தவித்து வருகிறார்கள். எங்களை காத்திருக்க சொல்லியிருக்கிறார்கள்.
முதல்-அமைச்சர் பேசிய பிறகு நம்பிக்கை பிறந்திருக்கிறது. நாங்கள் போன் செய்தால் அதிகாரிகள் போன் எடுக்கிறார்கள். எனவே எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.