லாஸ்பேட்டையில் வீடு புகுந்து தாக்குதல்

லாஸ்பேட்டையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ரவுடி உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;

Update: 2022-02-24 18:16 GMT
லாஸ்பேட்டையில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ரவுடி உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கல்லூரி மாணவர்
புதுச்சேரி லாஸ்பேட்டை லட்சுமிநகர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் குபேந்திரன் (வயது 19). கல்லூரி மாணவர். சம்பவத்தன்று மாலை இவரது வீட்டின் அருகே சிலர் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். இதை பார்த்த குபேந்திரன் அங்கு சென்று அவர்களை தடுத்துள்ளார். 
இதனால் ஆத்திரம் அடைந்த அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்ற மாற்றான் (21), தர்மசீலன் (21) ஆகிய 2 பேரும் சேர்ந்து குபேந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
வீடு புகுந்து தாக்குதல்
இதனால் கோபமடைந்த குபேந்திரன் தனது நண்பர்கள் கருவடிக்குப்பம் சதீஷ் (21), லாஸ்பேட்டை வெற்றி (25), இடையஞ்சாவடி சாலையை சேர்ந்த சீனு (20), லட்சுமி நகர் தரண் (19), பிரதோஷ் (24), அருண்குமார் (23), விபிலன் (19) ஆகியோருடன் சேர்ந்து லோகேஷ் வீட்டிற்கு சென்று அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த மோதல் தொடர்பாக இருதரப்பினரும் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். குபேந்திரன் அளித்த புகாரின் பேரில் லோகேஷ், தர்மசீலன் ஆகிய 2 பேர் மீதும், லோகேஷ் அளித்த புகாரின் பேரில் குபேந்திரன், வெற்றி உள்பட 8 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 
10 பேர் கைது
இந்த நிலையில் இரு தரப்பினரையும் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 10 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் கைது செய்யப்பட்ட வெற்றி ரவுடி பட்டியலில் உள்ளார். இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில்  இருப்பது  குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்