கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா: தமிழகத்தை சேர்ந்த 50 பேர் பங்கேற்க இலங்கை அனுமதி
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள இலங்கை அனுமதி வழங்கி உள்ளது.;
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே வங்கக்கடலின் நடுவே உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் நடைபெறுவது வழக்கம். அது போல் இந்த ஆண்டும் கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயத்தின் திருவிழா மார்ச் 11,12 ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெறும் திருவிழாவில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது என முதலில் இலங்கை அரசால் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் குறிப்பிட்ட அளவிலான நபர்களையாவது கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று பாம்பன் பகுதியில் உள்ள நாட்டுப்படகு மீனவர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தும், கோரிக்கை விடுத்தும் வந்தனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 50 பேர் மட்டும் கலந்து கொள்ளலாம் என இலங்கை அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து நாட்டுப்படகு மீனவர் சங்க தலைவர் எஸ்.பி.ராயப்பன் கூறும்போது, கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தமிழக பக்தர்கள் எந்தவித அனுமதியும் ஆவணமும் இல்லாமல் கலந்து கொள்ளலாம் என கச்சத்தீவு ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது. அப்படி இருக்கையில் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள்தான் கலந்து கொள்ள வேண்டும் என இலங்கை அரசு தெரிவிப்பது ஏற்புடையதல்ல.
குறைந்தபட்சம் 200 பேராவது தமிழகத்திலிருந்து இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் கலந்து கொள்ள மத்திய-மாநில அரசுகள் அனுமதி வழங்கி, அங்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.