“உத்தரவு போடுபவனாக மட்டுமல்ல, கண்கானித்துக் கவனிப்பவனாகவும் இருப்பேன்” - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘திராவிட மாடல்' ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம்தான் உள்ளாட்சித் தேர்தலின் வெற்றி என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-02-23 12:05 GMT
சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த 19-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. மாநகராட்சிகளில் 1,373 வார்டுகளுக்கும், நகராட்சிகளில் 3,842 வார்டுகளுக்கும், பேரூராட்சிகளில் 7,605 வார்டுகளுக்கும் என மொத்தம் 12,820 வார்டுகளுக்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 57,746 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 21 மாநகராட்சிகளிலும் தி.மு.க.வே வெற்றி வாகை சூடியது. அதே போல 132 நகராட்சிகளிலும், 435 பேரூராட்சிகளிலும் திமுக அமோக வெற்றி பெற்றது. 

அதிலும் குறிப்பாக அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த கொங்கு மண்டலத்திலும் தி.மு.க. கால்பதித்து வரலாற்று சாதனை படைத்தது. அங்குள்ள பெரும்பாலான இடங்களையும் தி.மு.க. கைப்பற்றி அசத்தியது. இந்த வெற்றியை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் வரும் மார்ச் 2-ந் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்கள். 

இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி குறித்து திமுக தலைவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது;-

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்கள், உடன்பிறப்புகள், தோழமைக் கட்சியினர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

கூட்டணியில் ஒற்றுமை என்பது கொள்கை உறவாகவும் மிக நீண்ட காலமாக தொடர்ந்து வருவதால் தான் இந்த வெற்றி சாத்தியமானது. அனைத்து மக்களின் அரசாக திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது. இதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!

9 மாத காலத்தில் கழகத்தின் செல்வாக்கு மக்களிடையே மிக அதிகளவில் பெருகிவிட்டதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. திராவிட மாடல் ஆட்சிக்கு மக்கள் வழங்கிய மணிமகுடம் தான் உள்ளாட்சித் தேர்தல் வெற்றி!

திட்டங்களை மக்களின் கைகளில் சேர்க்கும் கடமை உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத்தான் உண்டு. உத்தரவு போடுபவனாக மட்டுமல்ல, கண்கானித்துக் கவனிப்பவனாகவும் நான் இருப்பேன். 

வெற்றியை வழங்கிய மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க நிச்சயம் வருவேன். வாருங்கள், நாம் அனைவரும் இணைந்து நமக்கான நல்லதோர் தமிழ்நாட்டை அமைப்போம்!”

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்