நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான தபால் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது.;
சென்னை,
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.
இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும்.
இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும். பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் ‘சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.
இதுவே, ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையாக கருதப்படும். மாநகராட்சி, நகராட்சியை பொறுத்தமட்டில் பெரும்பாலான வார்டுகளுக்கான தேர்தல் 40-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்றதால் அதிகபட்சமாக 4 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சுற்று முடிவு விவரம் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் உள்ள அறிவிப்பு பலகையில் ஓட்டப்பட்டு வருகிறது . மேலும், ஒலி பெருக்கி மூலமும் அறிவிக்கப்பட்டு வருகிறது.
தபால் வாக்குகளை பொறுத்தமட்டில் ஒவ்வொரு வார்டிலும் குறைவான எண்ணிக்கையிலே இருக்கும் என்பதால் காலை 8.30 மணியில் இருந்து 9 மணிக்குள் எண்ணி முடிக்கப்பட்டு விடும்.