முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்..!

திமுக பிரமுகரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.;

Update: 2022-02-21 18:58 GMT
சென்னை, 

ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் உள்ள காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தி.மு.க.வினர் கள்ள ஓட்டு போடுவதாக, அ.தி.மு.க. மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற ஜெயக்குமார் மற்றும் அதிமுக தொண்டர்கள், தி.மு.க. தொண்டர் ஒருவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஜெயக்குமாரும் தனது முகநூல் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட திமுக பிரமுகரை அதிமுகவினர் சட்டையைக் கழற்றி அழைத்து சென்றுள்ளனர். இதனையடுத்து திமுக பிரமுகர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீதும் புகார் கொடுக்கப்பட்டது. 

இந்த சூழலில் அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது இல்லத்தில் வைத்து, 40 பேர் அடங்கிய போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். பின்னர் அவரை, போலீஸ் வாகனத்தில் அழைத்து சென்றனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்தின் முன்பு அவரது மகனும், அ.தி.மு.க. முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்த்தன், தனது ஆதரவாளர்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இந்நிலையில்  திமுக பிரமுகரை தாக்கிய புகாரில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜார்ஜ் டவுண் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனிடையே எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் கூடிய ஏராளமான அதிமுகவினர் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர்.

மேலும் செய்திகள்