நில அளவைத் துறையில் ஏற்கனவே உள்ள பணியிடங்களை ஒழிக்கும் முடிவை கைவிட வேண்டும்: டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2022-02-20 17:33 GMT
தமிழ்நாடு நில அளவை மற்றும் பதிவேடுகள் துறைக்கான பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் நியமனத்தில் தலைகீழ் மாற்றங்களைச் செய்ய நில நிர்வாக ஆணையர் முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக புதிய அரசாணை வெளியிடுவதற்கான கோப்பு வருவாய்த்துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

தமிழக அரசின் நில நிர்வாக ஆணையரும், இயக்குனரும் பரிந்துரைத்துள்ள மாற்றங்களை தமிழக அரசு ஏற்றுக் கொண்டால், நில அளவை மற்றும் அது சார்ந்த பணிகளில் உள்ள 7 ஆயிரம் பணியிடங்கள் ஒழிக்கப்படும்; 7 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வாதாரம் இழக்கும். அத்தகைய பாதிப்பை அரசு அனுமதிக்கக் கூடாது. அரசு ஊழியர்களின் நலன்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தருணங்களில் வாக்குறுதி அளித்துள்ளார். அதுமட்டுமின்றி, தமிழக அரசில் புதிதாக 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்றும் வாக்குறுதி அளித்திருந்தார். அதற்கு நேர்மாறாக ஏற்கனவே உள்ள அரசு பணியிடங்களை ஒழிக்கவும், வேலைவாய்ப்புக்கான நடைமுறைகளை மாற்றுவதற்கும் அதிகாரிகள் முயலக்கூடாது. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் தலையிட்டு, நில அளவை பணியாளர் நலனுக்கு எதிரான மாற்றங்களை தடுக்க வேண்டும். இப்போதுள்ள நிலையே தொடர்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்