நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் முறைகேடு: மநீம கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு; வாக்குகளை எண்ணக்கூடாது என மாநில தேர்தல் ஆணையம் முன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சென்னை,
தமிழகத்தின் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று நிறைவு பெற்றது. மாநகராட்சி வார்டுகள் 1,369, நகராட்சி வார்டுகள் 3,824 ,பேரூராட்சி வார்டுகள் 7409 என மொத்தம் 12,602 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மாநிலம் முழுவதும் 60.70% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதில்,அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.86% வாக்குகளும், குறைந்தபட்சமாக சென்னையில் 43.59% வாக்குகள் பதிவாகி உள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் முறைகேடு நிகழ்ந்துள்ளது என்பதால் வாக்குகளை எண்ணக்கூடாது என இன்று மாநில தேர்தல் ஆணையம் முன் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மறு வாக்குப்பதிவு நடத்திட வலியுறுத்தியம் மாநில தேர்தல் ஆணையத்தை ம.நீ.ம கட்சி நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணிக்கு மேல் கள்ள ஒட்டு பதிவானதாக வும் கூறி கருப்பு துணிகளால் கண்களை கட்டிக்கொண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொரோனா பாதித்தவர்கள் என்ற பெயரில் கள்ள வாக்கு செலுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாக்களித்தவர்களின் எண்ணிக்கை, சிசிடிவி காட்சிகளை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது வாக்குவாதம் ஏற்பட்டு போராட்டக்காரர்களும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.