சம்பளம் கேட்ட காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்த முதலாளி

சம்பளம் கேட்ட காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த முதலாளி உட்பட 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-02-20 03:29 GMT
கோவை,

மதுரை மாவட்டம் தெற்குமாசி வீதியை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 76). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவை வந்தார். அவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

அங்கு அவருக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் கொடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. இது பற்றி அவர் தனியார் நிறுவன உரிமையாளர் திலிப்குமார் மற்றும் நிறுவன அதிகாரி ஜான் ஆகியோரை தொடர்பு கொண்டு சம்பளம் வழங்கும்படி கேட்டு உள்ளார்.

அதற்கு அவர்கள், ரத்தினவேலை நவ இந்தியா பகுதிக்கு வரும்படி கூறியுள்ளனர். அதை நம்பி ரத்தினவேல் அங்கு சென்று, அவர்களிடம் சம்பளம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் 2 பேரும், ரத்தினவேலிடம் உங்களின் வங்கி கணக்கிற்கு சம்பளத்தை அனுப்பி விட்டோம். ஏ.டி.எம். எந்திரத்தில் சம்பள பணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறியதாக தெரிகிறது.

அதை நம்ப மறுத்து ரத்தினவேல், அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த திலிப்குமார், ஜான் ஆகியோர் ரத்தினவேலை சரமாரியாக தாக்கினர். இதனால் வலியால் துடித்த அவர் அலறினார். உடனே ரத்தினவேலை காரில் ஏற்றி கொடிசியா பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அங்கிருந்த ஒரு கழிப்பறை அருகே ரத்தினவேல் மீது பெட்ரோல் ஊற்றி உயிருடன் தீவைத்தனர். இதனால் அவருடைய உடலில் தீ மளமளவென்று பரவி எரிந்தது. இதனால் அவர் உயிருடன் தீயில் எரிந்தபடி கூச்சலிட்டார். உடனே திலிப்குமார், ஜான் ஆகிய 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ரத்தினவேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து திலிப்குமார், ஜான் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்